சலீம் திரை விமர்சனம்

நீதியாகவும் நேர்மையாகவும் வாழ்க்கை நடத்தி வரும் அப்பாவி ஒருவன் தனக்கு நேர்ந்த கொடுமை காரணமாக நீதியின் பாதையில் இருந்து விலகி அநீதி பாதைக்கு சென்றால் ஏற்படும் பிரச்சனைகளை த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகளுடன் விளக்கியிருக்கும் படம்தான் சலீம்.

மருத்துவமனை ஒன்றில் டாக்டராக மிக நேர்மையாக பணிபுரியும் சலீம், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். நிஷா என்ற பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தபின்னர் இருவரும் சகஜமாக பழகுகின்றனர். இந்நிலையில் சலீமின் அளவுக்கதிகமான நேர்மை நிஷாவை எரிச்சல் அடைய செய்கிறது. இவ்வளவு நேர்மையாக இருக்கும் மனிதரோடு எப்படி குடும்பம் நடத்துவது என்று நினைத்து சலீமை திருமணம் செய்ய திடீரென மறுக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சலீமுக்கும் இன்னொரு அதிர்ச்சி அவன் வேலை செய்யும் மருத்துவமனையில் காத்திருக்கிறது. நோயாளிகளை ஏமாற்றி பணம் பறிக்க இருக்கும் ஒரு செயலுக்கு சலீம் ஒத்துழைக்க மறுப்பதால் அவன் வேலையில் இருந்து தூக்கி வீசப்படுகிறான்.
தனது நேர்மைக்கும், நீதிக்கும் கிடைத்தது அவமானம்தான் என்பதை அறிந்து வெகுண்டு எழும் சலீம், இரண்டாவது பாதியில் சிவாஜி ரஜினி போல் சிங்கப்பாதையை தேர்வு செய்கிறார். அதன்பின்னர் நடக்கும் பிரச்சனைகள் அதை சலீம் சமாளிக்கும் விதத்தை த்ரில்லிங் காட்சிகளுடன் சிறப்பாக அளித்திருக்கிறார் இயக்குனர் நிர்மல்குமார்.

நான் படத்தில் வரும் முதல் பாதியை போல இதிலும் அந்த அப்பாவித்தனமான கேரக்டர். இப்படி ஒரு அப்பாவித்தனமான முகத்திற்கு கண்டிப்பாக விஜய் ஆண்டனியை விட்டால் வேறு ஆளே இல்லை என்று கூறலாம். அதேபோல் இரண்டாவது பாதியில் வெகுண்டு எழும் விஜய் ஆண்டனியின் நடிப்பும் சிறப்பு. தனக்கு எந்த கதை செட் ஆகும் என்பதை கணித்து தேர்வு செய்த புத்திசாலித்தனத்தை பாராட்டலாம்.

அறிமுக நாயகி அக்ஷாவின் நடிப்பில் இளமை துள்ளுகிறது. பாடல் காட்சியில் இளசுகளை சூடேற்றுகிறார். இரண்டாவது பாதியில் இவரது நடிப்பும் சூப்பர். தமிழ் சினிமாவிற்கு இன்னொரு நல்ல கதாநாயகி கிடைத்துவிட்டார்.

முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை மைனஸ். ஆங்காங்கே டுவிஸ்ட் வைத்து திரைக்கதையை நகர்த்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இரண்டாவது பாதியின் ஜெட் வேக திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், முக்கியமாக ஆச்சரியப்பட வைக்கும் க்ளைமாக்ஸ் ஆகியவை படத்தின் ப்ளஸ்கள்.

நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் விஜய் ஆண்டனி. ஐந்து பாடல்களில் மூன்று பாடல்கள் மிக அருமை. அதுவும் மஸ்காரா பாடலில் தியேட்டரே எழுந்து ஆடுகிறது.

மொத்தத்தில் சலீம் சந்தேகமில்லாத வெற்றிப்படம்தான்

Post a Comment

 
Top